Pages

Saturday 15 February 2014

கண்நோய் தீர்க்கும் தலம்.

காஞ்சீபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில்
 முருங்கை மரத்தின் நிழலில் ஜோதி லிங்கமாக எழுந்தருளி இருக்கும் கச்சபேஸ்வரரை சூரியன் தேவ வடிவாக வழிபட்டதாக கூறப்படுகிறது. 

இங்கு சூரிய தேவன் ஒரு தீர்த்தம் (குளம்) அமைத்து பெருமானுடன் இஷ்டசித்தீஸ்வரர், ஞான சித்தீஸ்வரர், யோக சித்தீஸ்வரர், தர்ம சித்தீஸ்வரர் மற்றும் வேத சித்தீஸ்வரர் ஆகிய லிங்கங்களை எழுந்தருள செய்து வழிபட்டுப் பேறு பெற்றதாக காஞ்சீபுரம் தல புராணம் கூறுகிறது. 

இந்தக் கோவிலில் சூரியன், விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று விளங்கும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய உதயத்தில் நீராடி ஜோதிர் லிங்கத்தை வழிபட்டு சூரியனையும் வழிபடுவோர் நோய் நொடியின்றி வாழ்வர் என்பது ஐதீகம். குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். 

ஒருமுறை ‘மயூரசர்மன்’ என்ற கவுடதேச மன்னன் விதி வசத்தால் தன் இரு கண்களையும் இழக்க நேரிட்டது. இந்த தலத்து மகிமை அறிந்து இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி மீண்டும் அவன் பார்வை பெற்றதாக புராணம் கூறுகின்றது. 

வடமொழியில், புலமை பெற்ற அவன், கண்பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் சூரியனை துதித்து இயற்றிய நூல் தான் ‘சூரியசதகம்’ ஆகும்.

பாவம், தோஷம் போக்கும் மாசிமகம்.

மாசி மாத மகநட்சத்திரத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே மாசி மகம். மாசி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வரும் தலம் குடந்தை.
 இங்கு ஆண்டு தோறும் மாசிமக விழா நடைபெற்றாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமக விழா மிகவும் சிறப்பு. 

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, மகாநதி, பயோஷ்ணி, என்ற நவநதிகளின் தேவதைகள் பரமசிவனை வழிபட்டு எங்கள் புனித நீரில் உலக மக்கள் மூழ்கி எழுவதால் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் நாங்கள் சுமக்கிறோம். 

அதனால் நாங்கள் மாசுபட்டுள்ளோம். எங்களுக்கு விமோசனம் வேண்டும் உதவுங்கள் என வேண்டினர். அதற்கு சிவபிரான், நீங்கள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மூழ்கி எழுந்து கும்பேஸ்வரனாகிய எம்மை வழிபட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் எனக் கூறினார். 

நதி தேவதைகளும் அப்படியே செய்து விமோசனம் பெற்றனர். ஆண்டு தோறும் அவர்கள் அப்படி வரும் நாளே மாசிமகம். அன்று சகல புண்ணிய நதிகளிலும் நீராடும் பாக்கியம் பெறவே இந்த விழா நடக்கிறது.  இக்குளத்தை வணங்கினால் சிவபிரானோடு சேர்ந்து எல்லா தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். 

இக்குள நீரை சிறிதளவு உட்கொண்டாலே சகலவித பாவங்களும் தீரும். இங்கு நீராட வேண்டுமென மனதால் நினைத்தாலே கூட புண்ணியம் தான். மகாமகக் குளத்தில் 66 கோடி தீர்த்தங்கள் கலந்துள்ளன. 9 நதிகளும் மாசியில் வந்து கூடும். 

இக்குளத்திற்குள் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இக்குளத்தில் அமிர்தம் கலந்துள்ளதால் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் மகாமகத்தன்று நீராட ஏராளமான புண்ணிய பலன் கிடைக்கும். தொடர்ந்து 5 வருடங்கள் மாசி மகத்தன்று மகாமகக் குளத்தில் மூழ்கி எழுவதால் புத்திரபாக்கியம் கிட்டும். 

மாசி மகத்தன்று நீராடினால் வாரிசுகளின் ஆயுள் அதிகரிக்கும். மாசிமக நாளில் இங்கு அமைந்த 17 சிவாலயத்தையும், 5 விஷ்ணு ஆலயத்தையும் அத்துடன் மாமாங்கக் குளக்கரையில் பக்கத்துக்கு நான்கு வீதம் அமைந்த பதினாறு சின்ன சிவ சன்னதிகளையும் தரிசிப்பது நல்லது. 

மாசி மகத்தன்று இத்தனை சுவாமிகளும் இக்குளத்தில் தீர்த்தவாரி காண்பர். அவற்றுள் ஒரு ஆலயமான ஏகாம்பரேஸ்வரர் ஆலய இறைவன் ஏகாம்பரநாதருக்கு பதில் காமாட்சியம்மை தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். அப்பனும், அம்மையும் ஒன்றே என்பதை இதனால் அறியலாம்.

தம்பதியினர் ஒற்றுமைக்கு மாசி மகம் விரதம்.


எல்லா மாதங்களிலும் 'மகம்' நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே 'மாசி மகம்'
என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் சொல்கின்றன. உலகத்தைப் படைப்பதற்காக உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கும்பத்தில் வைத்தனர்.

அது நீரில் மிதந்து வரும் பொழுது, கும்பத்தை இறைவன் அம்பால் எய்ய அதன் மூக்குப் பகுதி அதாவது, முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே 'கும்பகோணம்'
என்ற திருத்தலமாகப் பெயர் பெற்றது. 

இங்கு மகாமகம் விழா சிறப்பாக நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற வருடங்களில் வரும் மாசி மாதங்களில் 'மகம்' நட்சத்திரம் வரும் பொழுது நாம் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். 

இது முருகப் பெருமானுக்கும்
உகந்த விரதமாகவும் கருதப்படுகிறது. அன்றைய தினம் தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் ஒற்றுமை,குழந்தைப்பேறு கிடைக்கும். அன்றைய தினம் சிவனை வழிபடுவதன் மூலம் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.

பழனி–திருச்செந்தூர் ரெயில் சேவை நாளை தொடக்கம்:

மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பழனி–திருச்செந்தூர் ரெயில் சேவை நாளை (16–ந்தேதி) முதல் தொடங்கப்படுகிறது. அறுபடை முருகன் கோவில்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும்.தொடக்க விழாவினை தொடர்ந்து 17–ந்தேதி முதல் ரெயில் போக்குவரத்து தினசரி நடைபெற உள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு ரெயிலை பழனியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்தும் பழனிக்கு நாளை காலை 10.20 மணிக்கு ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது.
 இந்த ரெயில் பழனியில்
இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு புறப்படுகிறது. மதுரைக்கு காலை 10.15 மணிக்கு வந்து 5 நிமிடம் நிற்கிறது. 10.20 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு பகல் 2 மணிக்கு திருநெல்வேலிக்கும், 4 மணிக்கு திருச்செந்தூருக்கும் சென்றடைகிறது.


இதேபோல் திருச்செந்தூரில்
இருந்து தினமும் காலை 10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. திருநெல்வேலிக்கு 11.20 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 4.10 மணிக்கு வருகிறது. 5 நிமிடங்கள் நின்று விட்டு 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 7.20 மணிக்கு பழனி சென்றடைகிறது.
மேற்கண்ட தகவலை மதுரை மண்டல ரெயில்வே மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி, முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISE HERE.

space for ads